Monday, June 18, 2007

சும்மா கிறுக்கறேன்

சின்ன வயசில நான் நான் வளர்ந்த ஊருக்கு வராமாலே இருந்திருக்கலாம். நான் வளர்ந்த ஊருக்கு வந்த உடனே வேற ஊருக்குப் போயிருந்திருக்கலாம். நான் படிச்ச ஸ்கூலில படிக்காமலே போயிருந்திருக்கலாம்.

இது இப்படி நடந்திருந்தா அது அப்படி நடந்திருந்தா எது எப்படி நடந்திருக்கும்ன்னு யோசிக்கறது என்ன ஒரு முட்டாள்தனம் தான் இல்லையா? இந்த மாதிரி யோசிக்கறதும் புண் பட்ட மனசைப் புகை விட்டு ஆத்தறேன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை :-). பல சமயம் இதைக் கேட்டு சிரிச்சிருந்தாலும், முட்டாள்தனம் நினைச்சாலும் புண் பட்ட மனசுக்கு மட்டும் புரியற சிதம்பர ரகசியம் இதுன்னு நினைச்சதும் உண்டு. இதும் அது போலத்தான்னு நினைக்கறேன்.

இப்படி சின்னச் சின்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சம் மாறி இருந்தாக் கூட உன்னைப் பார்க்காமலே போயிருந்திருக்கலாம். உன்னைப் பார்க்காம இருந்திருந்தா என்ன? வாழ்க்கை என்ன சினிமாவா? உன்னைப் பார்க்காம போயிருந்தா என் வாழ்க்கையே மாறி இருந்திருக்குமுன்னு டயலாக் அடிக்க. இப்ப கொட்டுற குப்பையைத்தான் அப்பவும் கொட்டீட்டு இருந்திருப்பேன்.

உன்னைப் பார்த்ததாலயா அழகான பொண்ணுகளோட நேருக்கு நேர் பார்க்கக் கூட தைரியம் கூட இல்லாம போச்சு? இல்லை உன்னைப் பார்த்ததாலயா பிடிச்ச பொண்களோட பேசக் கூட தைரியம் இல்லாம போச்சு?

உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்னோட முக்கியத்துவம் இல்லாத வாழ்க்கை முக்கியத்துவம் இல்லாமலேயே தான் இருந்திருக்கும். ஒண்ணும் பெரிசா மாறி இருக்கப் போறதில்லை?

கன்னக் குழியோட இருக்கற பொண்ணா இல்லாட்டியும் கன்னக் குழி இல்லாத எதோ ஒரு பொண்ணை எந்த ஸ்கூலுல படிச்சிருந்தாலும் பிடிச்சிருக்கத்தான் போகுது. அறியாப் பருவத்தில புரியா உணர்வு கொள்றதுங்கறது மனுஷன் குரங்கில இருந்து பரிணாம வளர்ச்சி அடையறதுக்கு முன்னாடியே பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்.

அறியாப் பருவத்து புரியா உணர்வு கூர்மையான மூக்கு கொண்ட பொண்ணு மேல ஏற்பட்டதாலயா படிச்ச ஸ்கூலை விட்டு வேற ஸ்கூல் போன 2 வருசத்துக்கு தொடர்ந்தது? கண்டிப்பா இல்லை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே. அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.

எத்தனை அழகான பொண்ணுங்களைப் பார்த்து தடுமாறினாலும் என் கதைன்னு எப்போ சொன்னாலும் உன் பேரை மட்டும் ஏன் சேர்த்தி சொல்லுறேன்? எனக்குன்னு கதைன்னு ஒண்ணும் இல்லாட்டிக் கூட எனக்குன்னு ஒரு கதை இருந்தா அது உன்னோட மட்டும் தான் இருக்கணும்ன்னு ஒண்ணுமில்லாத அதையே கதையா சொல்லத் தோணுது. ஆனாலும் உன்னைப் பார்க்காம போயிருந்தா கதை சொல்லி இருக்க மாட்டேனா சொன்னாப் அது பொய். அப்படீன்னா நீ இல்லாம போயிருந்தாலும் கதைன்னா கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கத்தான் போகுது. அப்படீன்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்ன பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போகுது?

பேனான்னு ஒண்ணு கைல கிடைச்சா எதையாவது கிறிக்கீட்டே இருக்கற என்னோட பழக்கத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உன் பேரை அன்னிச்சையாக் கிறுக்காம இருந்திருந்தா வேற எதையாவது கிறிக்கீட்டுத் தான் இருந்திருப்பேன். உன்னைப் பார்க்காமப் போயிருந்தாலும் இதிலயும் பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லை.

ஆழியார் அறிவுத் திருக்கோயில் பஸ் பயணம், எண்ட்ரண்ஸ் எழுதப் போன பஸ் பயணம், நீ என்னை புத்திசாலின்னு உங்க வீட்டுல சொன்னதா எங்கம்மா எங்கிட்ட சொன்னது, monk who sold ferrari புஸ்தகத்தைப் பத்தி சுவாரஸ்யமா ரெண்டு மணி நேரம் பேசின போன் கால், சேர்ந்து பார்த்த சினிமா, வீட்டுல டிராப் பண்ணின பைக் பயணம், வேலைப் பார்க்காம சாட் பண்ணின நாட்கள் இப்படி வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத நினைவுகள் பலதுல நீ இருக்குது உண்மைதான். உன்னைப் பார்க்காம போயிருந்தா இதுக்கு பதிலா வேற நினைவுகள் இருக்காம போயிருக்கும்ன்னு என்னை நானே ஏமாதிக்க முடியாது கண்டிப்பா வேற சில நினைவுகள் இருந்திருக்கும் அது தான் உண்மை.

உண்மை என்னான்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் பெண்கள் கிட்ட பேசற தயக்கம் கொள்கிற, காதல் பத்தி கனவாப் பேசித் சுத்துற, நடைமுறைக்கு கொஞ்சமும் ஒத்து வராத கற்பனைகள் கொண்ட நான் நானாகவேதான் இருந்திருப்பேன். இதில் இருந்து மாறி அப்படி இருந்திருப்பேன் அப்படி இருந்திருப்பேன்னு சொன்னா அது கண்டிப்பா உண்மை இல்லை.

இதை எல்லாம் ஒத்துக் கொள்கிற முடிந்த என்னால, உன்னைப் பார்க்காமலே இருந்திருந்தாலும் என்னோட அடி மனசில உன்னைத் தான் காதலிச்சுட்டி இருந்திருப்பேன்ங்கற அந்த சிந்தனையை மட்டும் மறுக்கவோ இல்லை அப்படி எல்லாம் இல்லைன்னு மாத்தி யோசிக்க மட்டும் முடியல.

Thursday, June 01, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 2

இந்த வலைப் பதிவை ஆரம்பித்தது என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் எனக்குள் இருக்கும் காதலை பற்றிய தேடலின் ஆர்வத்திற்கு தீனி போட்டு கொள்ளவும்தான்.

இந்த இடுகையில் நான் சொல்லப் போவது என் தேடல் ஆர்வத்தை அதிகரித்த ஒரு குழப்பமான காதலைப் பற்றி.

காதல் எனபது என்ன? ஒருவர் மேல் உள்ள ஈர்ப்பா? ஈர்ப்பாக மட்டும் இருக்க முடியாது. ஏனெனில் நாம் பலர் பால் ஈர்க்கப் படுகிறோம் அனைத்துமே காதலாக முடியாதல்லவா? ஆக இந்த வட்டம் மிக பெரியதா உள்ளதால் சிறிய வட்டம் ஒன்று வரைவோம். ஈர்ப்புடன் ஒத்த குணாதிசியங்கள் இருப்பின் காதல் ஆகுமா? இல்லை நாம் ஈர்ப்பு கொண்ட பலரிடம் நாம் ஒத்த குணம் இருப்பதைக் காண்கிறோம். இதுவும் பெரிய வட்டமாகவே இருக்கிறது.மேலும் இந்த வட்டத்தை சுருக்க முடியமா?

மேலே நான் செய்ய முயன்றது போல் வட்டத்தை சுருக்கி கொண்டே வந்து இந்த இருவருக்குள் மட்டுமே காதல் வரும் என்று நம்மால் கூறவே இயலாது. காதல் என்பது எந்த இருவருக்குள் வரும் என்று நாம் கேள்வி கேட்டால் நம்மால் அறிவியல் பூர்வமாக பதில் சொல்லவே இயலாது.

சரி எந்த இருவருக்குள் காதல் வரும் என்று வெளி ஒரு நபர்தான் கூற முடியாது காதல் செய்பவர்களுக்கு மட்டும் எப்படித் தெரியும் யாரை காதலிக்க வேண்டும் என்று? உங்களுக்கு இரண்டு பேரைத் தெரியும் இருவருமே உங்களை காதலிக்கிறார்கள். நீங்கள் யாரைக் காதலிக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்வீர்கள். இருவர் பேரிலும் உங்களுக்கு ஈர்ப்பு உள்ளது. இருவருமே உங்கள் குணங்களுக்கு ஒத்துப் போகும் தன்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்படி நாம் நினைக்கும் அனைத்து விசயங்களுமே இரண்டு பேரிடம் ஒத்துப் போனால் என்ன செய்வீர்கள்? எவ்வளவு சுருக்கியும் உங்கள் வட்டத்திற்குள் இருவர் இருந்தால் என்ன செய்வீர்கள்?

என்னடா தன்னைச் சுற்றி நடந்த காதல் கதைகளைச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா? கொஞ்சம் பொறுமையா இருங்க ஏனெனில் நான் கூறப் போகும் காதலில் கதையை விட கேள்விகளே அதிகம்.

சரி கதைக்குச் செல்வோம். இந்தக் கதையில் மூன்று கதாபாத்திரங்கள் நாயகி பெயர் குழலி, ஒரு நாயகனின் பெயர் செல்வன், மற்றொரு நாயகன்.

நாயகி 10 வது படிக்கும் சமயம் இருந்தே செல்வனுக்கு பழக்கம். நாயகியின் குடும்பத்தில் பல பிரச்சனைகள். நாயகியின் தந்தை ஒரு மாதிரியானவர் குடிப் பழக்கம் மற்றும் சில மோசமான பழக்கங்கள். இள நிலைப் பட்டப் படிப்பு முடிக்கும் வரை நாயகி 9 மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் வரா விட்டால் திட்டு விழுகும், விடுமுறை நாளில் வெளியில் போக இயலாது. இப்படி நம் நாயகிக்கு பல தொல்லைகள் வீட்டில். இப்படிப் பட்ட நம் நாயகிக்கு ஒரே ஆறுதல் நம் செல்வம்தான்.

இந்த பழக்கம் காதலாக கனிய சில காலங்களே பிடித்தது. இந்தச் சூழ்நிலையில் நம் செல்வனுக்கு அரபு தேசம் சென்று வேலை செய்யும் வாய்ப்பும் நம் நாயகிக்கு தன் வீட்டை விட்டு விடுதியில் தங்கி படிக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கா விட்டால் இந்தக் கதையை நான் எழுத இருக்க வேண்டியதில்லை.

ஆக நம் நாயகி தன் வாழ்க்கையில் முதன் முறையாக தன் வீட்டை விட்டு வெளியில் சென்று படிக்கவும், விடுதியில் தங்கவும் வாய்ப்பு கிடைத்தது.

நம் நாயகிக்கு இந்தச் சுதந்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் அவள் சென்ற சூழ்நிலை ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் மிகவும் நட்பாக பழகும் ஒரு சூழலாக அமைந்ததது.

ஒன்றாக சேர்ந்து படம் செல்வது, ஒன்றாக உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பது என்று பல சுதந்திரமான விசயங்கள் நம் நாயகிக்கு பிடித்திருந்தது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நம் நாயகிக்கு சொக்கனுடன் நட்பு ஏற்பட்டது. நம் நாயகியின் காதல் கதை உட்பட அனைத்து விசயங்களையும் சொக்கன் அறிந்து வைத்திருந்தான்.

ஒன்றாக சினிமா செல்வது, காலை உணவில் இருந்து இரவு உணவு வரை இருவரும் ஒன்றாக சாப்பிடுவது என்று இருவரின் நட்பும் விரிவடைந்தது.

இந்த மாதிரி சூழ்நிலையில் நம் சொக்கனின் மனது தடுமாற ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்தே கூட செல்வத்திடம் சாட் செய்துள்ளனர். ஆனால் இப்பொழுது நம் நாயகி செல்வனுடன் சாட் செய்யும் பொழுதோ அல்லது போனில் பேசும் பொழுதோ தனக்கு எரிச்சல் உண்டாவதை உணர்ந்தான்.

தன்னைவிட செல்வன் எந்த விசயத்தில் உயர்ந்து போய் விட்டான் என்று தன் மனதிற்க்குள்ளரே விவாதம் செய்ய ஆரம்பித்தான். மனதில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை ஒரு நாள் வெடித்து சிதற தானும் நாயகியை காதலிப்பதாக ஒரு நாள் கூறிவிட்டான்.

இதனைக் கேட்டு ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்த நாயகி சொக்கனுடன் பேசி இருவரும் சில காலம் பேசாமல் இருப்பதே நலம் என்று முடிவு செய்தனர். சொக்கனும் தான் செய்வது சரியல்ல என்று தோன்றியதால் சில காலம் பிரிந்தே இருக்கலாம் என்று முடிவு செய்தான்.

பிரிவு எந்தக் காதலை மறக்கவோ பிரிக்கவோ உதவி இருக்கிறது. நம் நாயகிக்கு இந்தப் பிரிவில் எதோ தொலைத்தது போன்றே ஒரு உணர்வு. இத்தனை காலம் சேர்ந்தே இருந்து விட்டதால் பிரிந்தும் இருக்க முடியவில்லை. ஆனால் சொக்கனுடன் பேசவும் இயலாது என்ன செய்ய முடியும்?

இந்த இடத்தில் நம் நாயகி தன்னுடைய முடிவாக ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று முடிவெடுத்து சொக்கனுடன் தன் நட்பை முறித்துக் கொண்டால். சொக்கனும் தான் செய்வது தவறு என்ற உணர்வினாலோ என்னவோ இந்த விசயத்தை அத்துடன் விட்டு விட்டான்.

ஆனால் அவர்களுக்குள் இருந்தது வெறும் நட்பு மட்டும் அல்ல என்று மட்டும் எனக்கு தெரியும். செல்வன் என்று ஒருவன் இல்லாவிட்டால் கண்டிப்பாக நாயகியும் சொக்கனின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி இருப்பாள். அவர்கள் கல்லூரி முடித்து கடைசியாக இருவரும் பிரியும் சமயம் இருவரும் இருந்த நிலையை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இதுதான் எனக்குள் இந்தக் கேள்வியை எழுப்பியது. யாருக்கு யார் என்று எப்படித் தீர்மானிக்க முடியும்? காதல் யார் மேல் கொள்வது என்று எதனை வைத்து நாம் தீர்மானம் செய்ய முடியும்? எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்....

Monday, May 29, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1(இரண்டாம் பாகம்)

நான் இந்தக் கதையை ஆரனுக்கு ராதை மேல் காதல் வந்ததுடன் நிறுத்தி இருந்தேன். அந்த சமயத்தில் ராதைக்கு ஆரன் மீது காதல் கிடையாது என்பதையும் ஆரனைவிட ராதைக்கு முதல் பாதுகாவலரான குமார் மீதுதான் அதிக நட்பு எனபதையும், குமாருக்கும் ராதை மேல் காதல் ஆனால் ராதை பல காதல்களை தன் குடும்ப சூழ்நிலை காரணமாக நிராகரித்து விட்டாள் நம் நாயகி எனபதையும் இங்கு உங்களுக்கு நியாபப் படுத்தி இருக்கிறேன். இதனின் முதல் பாகத்தை இங்கு காணலாம்.

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1

ஆக ஸ்பான்ஸர்ஷிப் பிடிக்கப் போன ஆரனின் கூச்ச சுபாவம் கண்டு அவனிடம் நன்றாக பேசியதைக் கண்டு நம் நாயகன் ஆரனுக்கு நாயகி மேல் காதல் உண்டாயிற்று. ஆனால் நாயகிக்கு அது போன்ற எண்ணங்கள் இல்லை. இது போக குமார் 1 மாத விடுமுறையில் இருந்து திரும்பி வந்தால் ராதை ஆரனுடன் பழகுவது குறைந்து விடும். எனவே ஆரனுக்கு தான் இந்த ஒரு மாதம் மட்டுமே நேரம் அதற்குள் ராதையின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

இங்கு நான் இங்கு சொல்லிக் கொண்டிருப்பது உண்மை கதை என்பதை ஞாபகப் படுத்தி கொள்கிறேன்.

ஆரனுக்கு எங்கிருந்து யோசனை தோன்றியது என்று எனக்கு தெரியவில்லை.

அவனுடைய யோசனைப்படி அவன் முதலில் ராதையிடம் தன் மீது இரக்கம் உண்டு பண்ண எண்ணிணான். பெண்களிடம் இரக்கம் வர மிக சுலபமான வழியைதான் பல சினிமாக்கள் நமக்கு தருகிறதே. அதில் ஒன்றான காதல் தோல்வியை துணைக்கு அழைத்துக் கொண்டான் நம் நாயகன்.

அதன் படி தான் முன்னால் ஒரு தலையாக காதலித்து, கூச்ச சுபாவத்தால் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விட்டு விட்ட முன்னால் காதலை மசாலா போட்டு ஒரு கதையாக உருவாக்கினான்.

அந்தக் கதையின்படி ஒரு வார்த்தை கூட பேசாத முன்னாள் காதலி தன்னை உருகி உருகி காதலித்ததாகவும், பெற்றோர் வற்புறுத்தலினாலேயே அவனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறினான்.

இப்படிச் சொன்னால் மட்டும் போதாது என்பதை உணர்ந்த ஆரன் தன் முன்னாள் காதலி இன்னும் தன்னைக் காதலிப்பதாகவும் தனக்காக இன்னும் தன்னுடம் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருப்பதாகவும், காதல் தோல்வியால் இவன் துவண்டுவிடக் கூடாது என்பதால் தினமும் இவனுடன் தொடர்பு கொண்டு அவனை ஊக்குவிப்பதாகவும் கதைகள் கட்ட ஆரம்பித்தான்.

இந்தக் கதைகளை நம்ப வைப்பதற்க்காக போலியான ஒரு மின்னஞ்சலையும் உண்டு பண்ணி அதில் இருந்து மின்னஞ்சல்களை அனுப்பத் தொடங்கினான். இதற்கு சில நண்பர்களும் துணையாக இருந்தார்கள்.

இப்படி படிப்படியாக இரக்கம் உண்டாக்கிய பின் தன்னுடைய திட்டத்தின் அடுத்த கட்டத்தை தொடங்கினான்.

அதன்படி தன் முன்னாள் காதலியிடம் இருந்து மின்னஞ்சல்கள் சரியாக வரவில்லை என்று ராதையிடம் புலம்ப ஆரம்பித்தான். இதற்குள் ராதைக்கும் அவன் மீது ஒரு இரக்கம் உருவாகி இருந்தது.

ஆரனும் தனக்கு வருவதாகக் கூறிய அனைத்துக் கடிதங்களையும் ராதையிடம் காண்பித்ததால் அவளும் கடிதங்கள் சரியாக வருவதில்லை என்று உணர்ந்தாள். ராதை ஆரனின் கதையை முழுமையாக நம்பி இருந்ததால் ஆரன் கடிதம் வருவது நின்று விட்டால் அவன் மனம் உடைந்து போய் விடுவான் என்று எண்ணி அவனை வேறு திசையில் திருப்புவதாக நினைத்து அவனிடம் தனக்கு தானே கொண்டிருந்த அளவுகோள்களை மீறி நெருங்கி பழக ஆரம்பித்தாள் நம் நாயகி.

இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டான் நம் நாயகன்.

இந்த நாடகம் நடந்து கொண்டுருக்கும் சமயத்திலேயே நம் குமாரும் விடுமுறை முடிந்து திரும்பி வந்தான். அவன் வந்த சில நாட்களிலேயே ராதை முன் போல் தன்னுடன் பழகுவதில்லை என்பதை உணர்ந்தான் இதனைப் பற்றி ராதையிடம் பேசலாம் என்றால் அதற்குள் கல்லூரி விழா வேறு வந்து அனைவரும் தங்களுடைய பணிகளில் அனைவரும் கவனல் செலுத்த வேண்டியதாகிவிட்டது. இதில் நம் நாயகன் ஆரனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தது. ராதையும், ஆரனும் ஒரு குழுவிலும் குமார் வேறு குழுவிலும் இருந்தார்கள்(கல்லூரி விழாக்களில் பல குழுக்கள் உண்டு உணவுக் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சிக் குழு போன்றவை). இப்படி சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைந்ததால் ராதையும் ஆரனும் மிக நெருக்காமானார்கள்.

இந்த நெருக்கத்திற்கு அப்பொழுதிருந்த ஏர்செல் நிருவனமும் துணை புரிந்தது. 11 - 6 செல் போன்கள் இலவசம் என்ற திட்டம் இவர்களுடைய நெருக்கத்திற்கு மிகவும் துணை புரிந்தது.

ஆகவே தன் யோசனையின் கடைசி கட்டத்தை நெருங்கினான் ஆரன். காதலை சொல்வதுதான் அந்தத் திட்டம். காதலை ஆரன் சொல்ல எடுத்த முறைதான் இந்தக் கதையிலேயே மிகவும் சுவாரஸ்யமான பகுதி. ஒரு நாள் ராதையை அவசரமாக வரச் சொன்ன ஆரன் தனக்கு தன் முன்னாள் காதலி அனுப்பியதாக இருந்த ஒரு மின்னஞ்சலைக் காண்பித்தான்.

அந்த மின்னஞ்சலில் தன் முன்னாள் காதலி ஆரனிடம் தான் இப்பொழுது திருமணம் புரிந்து விட்டதால் தன்னுடைய கடமைகள் உள்ளதாகவும், ராதை மிக நல்ல பெண்ணாக உள்ளதால் அவளை ஏன் ஆரன் காதலிக்க கூடாது என்பது போல் எழுதியிருந்தது. இதைக் கண்டு ஆரன் மிக மிக உணர்ச்சிவசப் படுவது போல்(அவனேதான் எழுதி இருந்தாலும்) நடிக்க ஆரம்பித்தான். ராதை இந்த மின்னஞ்சலைக் கண்டு மிகவும் குழம்பிவிட்டாள். நம் நாயகி சில நாட்களாக ஆரனுடன் மிக நெருங்கி பழகி இருந்தாலும் காதல் கொண்டிருக்கிறாளா என்று அவளுக்கு புரியவில்லை.

ஆகவே அடுத்த நாள் சந்தித்த இருவரும் சில நாட்கள் பேசாமல் இருப்பதே நல்லது என்று முடிவு செய்தார்கள்.

தன்னுடைய யோசனை மிகவும் நன்றாக வேலை செய்ததைக் கண்ட ஆரன், அவர்கள் அப்படி முடிவு செய்த இரண்டு நாட்கள் கழித்து ராதைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டான். தொடர்பு கொண்டு தான் இரண்டு நாட்கள் அவளைக் காணாமல் தவித்து போயிருப்பதாக கூறினான், ராதை நிலைமையும் அது போலத்தான் என்பதையும் உணர்ந்து கொண்டான். ஆகவே இருவரும் மீண்டும் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

மீண்டும் சந்திக்கும் சமயம் ராதை இன்னும் குழப்பத்தில் இருப்பதை அறிந்த ஆரன், தான் மிகவும் யோசித்ததாகவும் யோசித்த பிறகு தான் ராதையை காதலிப்பதாக உணர்ந்தாகவும் கூறினான்.

ராதை இதனை கேட்டு மிகவும் குழப்பம் அடைந்தாள். அவள் ஆரனுடன் நெருங்கி பழகி இருந்தாலும் அவள் இன்னும் அவனை காதலிக்கிறாளா என்று முடிவு செய்ய முடியவில்லை. அவள் அப்பாவும் காதல் என்றாலே வெறுக்கிற டைப் என்பதால் தான் முடிவு எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி பிரிந்தார்கள். கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதை உணர்ந்த ஆரன் கடைசியாக் செய்த காரியம் சினிமா தோற்த்தது போங்கள் என்று சொல்ல வைத்து விடும்.

தன்னுடைய கையை கிழித்துக் கொண்ட ஆரன் ராதைக்கு அது தெரியுப் படுத்தினான்( நண்பர்கள் எதற்கு ) உடனே அதிர்ந்து போன ராதை உடனே தன்னை சந்திக்குமாறு கூறினாள். அந்த சந்திப்பில் இருவரும் பேசினார்கள் பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள்.

எவ்வளவு பேசினாலும் குழப்பமாகவே இருப்பதைக் கண்ட ஆரன், கடைசியில் பளீர்ர்ர் என்று ஒரு அறை விட்டு நீ என்னைக் காதலிக்கிறாயா இல்லியா என்று கேட்டான். அதிர்ந்து போன ராதை அழுது கொண்டே ஆமாம் என்று கூறினாள்.

இதன் பிறகு என்ன நடந்தது கல்லூரி முடியும் வரைக் காதலித்த ஆரனும் ராதையும், கல்லூரி முடிந்தவுடன் ஆரனின் மற்றொரு திட்டத்தால் ராதையின் பெற்றோர் சம்மதம் வாங்கி கல்யாணம் செய்து கொண்டு இன்று மகிழ்ச்சியாக உள்ளார்கள். சுபம் என்று சொல்லி விடலாம் ஆனால் குமார் நிலைமை என்ன ஆயிற்று என்பதையும் காண வேண்டும் அல்லவா?

குமாரின் நிலைமையை சொல்லும் சமயத்தில் நான் இங்கு சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

All is fair in love and war.

என்று சொல்கிறார்களே இது சரியா?

குமார்தான் முதலில் இருந்தே ராதையைக் காதலித்தான். ஆரன் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ராதையும் குமாரும் கூட சேர்ந்திருப்பார்கள்.

1 மாதம் விடுமுறையில் சென்றதைத் தவிர வேறு ஒரு தவறும் குமார் செய்யவில்லை.

அவன் ராதை ஆரனின் காதலை தாங்க முடியாமல் சில காலம் குடிகாரனாக மாறிவிட்டான்.

பின் நண்பர்களின் அறிவுரைகளின் பெயரில் திருந்தி இன்று நல்ல வேலையில் உள்ளான்.

சீக்கிரம் திருமணமும் புரியப் போவதாக கேள்விப் பட்டேன்.

ஆனாலும் என் மனதில் ஆரன் செய்த்தது சரியா ? ராதை செய்த்தது சரியா? குமார் என்ன தவறு செய்தான் என்ற கேள்விகள் உண்டு. அதே கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன்.

Wednesday, May 24, 2006

மதுமிதாவின் பதிவிற்க்காக

வலைப்பதிவர் பெயர்:
செந்தில் குமரன்

வலைப்பூ பெயர் :
கவிதைகளும் கருத்துக்களும்
பார்த்ததில் படித்ததில் ரசித்தது.
என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள்

உர்ல் :
http://kathalregai.blogspot.com/
http://rasithathu.blogspot.com/
http://kathalenpaarvaiyil.blogspot.com

ஊர்:
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நாடு:
யாதும் ஊரே யாவரும் கேளிர்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
திருமா என்ற நண்பர் தமிழ்மணம் பற்றி அறிமுகம் செய்து வலைப்பதிவு ஆரம்பிக்க உதவினார்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
ஜூலை 2005

இப்பதிவின் உர்ல் / சுட்டி :
http://kathalenpaarvaiyil.blogspot.com/2006/05/blog-post_24.html

இது எத்தனையாவது பதிவு:
41வது பதிவு

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
எழுதும் ஆசை உண்டு நண்பர் திருமா நன்றாக எழுதுகிறாய் வலைபதிவு ஆரம்பி என்று ஊக்குவித்ததால் ஆரம்பித்தது.

சந்தித்த அனுபவங்கள்:
இனிமையான அனுபவங்கள் - கைப்புள்ள, குமரன், என்னார், பொன்ஸ், தேவ், ஜொள்ளுப் பாண்டி, செந்தழல் ரவி, கவிதா போன்றவர்களின் பதிவுகளை படிக்கும் சமயம் கிடைத்தது. உடனே தோன்றிய சில பெயர்கள் இவை. மேலும் பலருடைய பதிவுகள் அற்புதமாக உள்ளது. இவர்கள் அனைவரின் பதிவுகளை படிக்க கிடைத்ததுதான் இனிமையான அனுபவம்.இந்த சந்தர்ப்பத்தை நான் நன்றாக எழுதிகிறீர்கள் என்று எழுத நினைத்த பல பின்னூட்டங்களுக்கு பதிலாக எடுத்துக் கொண்டு அவர்களைப் பாராட்டுகிறேன்.
கசப்பான அனுபவங்கள் - ஜாதி மதம் வெறி கொண்டு அழையும் பல மனிதர்களை சந்தித்தது ஒரு அனுபவம். அவர்களை எதிர்க்கிறோம் என்று வக்கிர புத்தி கொண்டு வலைப் பதிவை கேவலமாக பயன்படுத்தும் மன நிலை சரி இல்லாதர்வர்களை சந்தித்தது மற்றொரு அனுபவம்.

பெற்ற நண்பர்கள்:

அப்ப அப்ப மட்டும் எழுதுவதாலும் நான் எழுதும் கருத்துக்கள் யாருடனும் ஒத்து போகாதாதாலும்( மட்டமா எழுதுறேன்கிறதை பாலிஷ்டா சொல்லி இருக்கேன் ) நண்பர்கள் அதிகம் வலைப் பூக்களில் இல்லை.

கற்றவை:
பல விசயங்கள், மலைத்தது இங்குள்ள ஆற்றலைக் கண்டு. இங்குள்ள பல வலை பதிவர்கள் சினிமாவில் வருவதை விட நன்றாக நகைச்சுவை உணர்வுடன் எழுதுகிறார்கள். பலருடைய எழுத்துகள் என்னை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
200% யாரை பற்றியும் கவலை இல்லாமல் எழுதுவது போல ஒரு அற்புதமான விசயம் கிடையாது.

இனி செய்ய நினைப்பவை:
எழுத வேண்டும் இப்பொழுது எழுதுவதைவிட நன்றாக எழுத வேண்டும். உலகை மாற்றி மனித நேயம் வளரச் செய்ய வேண்டும்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
சூப்பர் ஹீரோவாக விரும்பும் ஒரு சராசரி மனிதன்

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
தமிழ்மணம், தேன்கூடு போன்ற சீரிய முயற்சிகளை மேற் கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள். மனித நேயம் வளர அனைவரும் பாடுபட வேண்டும். ஜாதி, மதம் போன்ற வேற்றுமைகள் ஒழிய வேண்டும்.

Tuesday, May 23, 2006

என்னைச் சுற்றி நடந்த காதல் கதைகள் - 1

மின்சாரக் கனவு படம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் பிரபுதேவா செய்தது சரியா தவறா? கஜோல் அரவிந்த் சாமி தன் மீது காதல் கொண்டிருக்கலாம் என்று தெரிந்திருந்தும் பிரபுதேவா மேல் காதல் கொண்டால் அது சரியா தவறா?

என்னடா தன்னை சுற்றி நடந்த காதல் பற்றி சொல்கிறான் என்று சொல்லிவிட்டு மின்சாரக் கனவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா?

இந்தப் கதையின் முடிவில் இதே போன்ற கேள்விகளை உங்கள் முன் வைக்கப் போகிறேன். அதற்க்கு நீங்கள் எனக்கு உங்களுடைய உண்மையான பதில்களை கொடுக்க வேண்டும்.

சரி கதைக்கும் செல்வோம்.

இந்தக் கதையின் நாயகன் ஆரன் என்று வைத்துக் கொள்வோம்( உண்மையான பெயர் வேண்டாமே ). ஆரன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவன். படிப்பில் படு கெட்டிக்காரன். பெண்களிடம் பேச வேண்டும் என்று ஆசை உண்டு ஆனால் அவனுடைய கூச்ச சுபாவம் அதற்கு தடை. இந்தக் கதை நடக்கும் முன்பே ஒரு பெண்ணைக் ஒரு தலையாக காதலித்து கடைசி வரை சொல்லாததால் அவளுடைய கல்யாணத்திற்க்கு நண்பர்களுடன் சென்று பரிசளித்து திரும்பி வந்தவன். பையன் சுமாராக இருப்பான்.

கதையின் நாயகி ராதை. தமிழ்ப் பெண். ஆரனுக்கு நேர் எதிர் அனைத்திலும். யாருடனும் எளிதில் கலகலப்பாக பழகி விடக் கூடியவள். ஒரு தரம் ஒரு நண்பன் விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கும் சமயம் பெண்ணிடம் பேசி கொண்டிருக்கிறோம் என்று யோசிக்காமல் f@#* you என்று சொல்லிவிட திருப்பி f@#* you என்று( விளையாட்டாகதான் ) என்று சொல்லி அதிரச் செய்தவள். நல்ல அழகி.

இந்தக் கதையின் இரண்டாம் நாயகன் குமார். பீகாரைச் சேர்ந்தவன். நல்ல கலகலப்பாக பழகக் கூடியவன். பெண், ஆண் என்று வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் நன்றாக பழகக் கூடியவன். பையன் வட நாடு என்பதால் நன்றாவே இருப்பான்.

கதை நடந்தது ஒரு கல்லூரியில். அந்தக் கல்லூரி வழக்கம் என்னவென்றால் பெண்கள் அனைவருக்கும் ஆண் ஒருவன் நண்பனாக இருக்க வேண்டும். பெண்கள் ஷாப்பிங் செல்லும் சமயம், சினிமாவிற்க்கு போகும் சமயம், வெளியில் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இந்த ஆண் பாதுகாவலர் போல கூட சென்று திரும்பி வர வேண்டும். அந்த ஆணின் உறவிற்கு ஆரம்பத்தில் கிடைக்கும் பெயர் நண்பன். இந்த நண்பன் என்ற உறவு காதல் வரை பல சமயம் சென்று முடிவதும் உண்டு.

இந்தக் கதையில் நம் நாயகி ராதைக்கும் ஒரு நண்பன் தேவையாய் இருந்தது. அந்த நண்பன் நம் குமார். ராதை வெளியில் செல்லும் சமயம் எல்லாம் குமார்தான் பாதுகாவலர். வெளியில் சென்று உணவு உண்பது, படம் செல்வது ஷாப்பிங் போவது என்று இவர்களுடைய உறவு சுமூகமாக 1 1/2 ஆண்டுகள் நீடித்தது.

இந்தச் சமயத்தில் குமாருக்கு ராதை மேல் காதல் உண்டாயிற்று. ஆனால் அதனை ராதையிடம் தெரிவிக்கவில்லை. ஏனெனில் ராதையின் பெற்றோர் காதல் கல்யாணம் என்றால் தவறு என்று நினைக்கும் வகை. இந்த விசயம் கல்லூரியில் உள்ள அனைவருக்கும் கிட்டத்தட்ட தெரியும். கல்லூரியில் உள்ள அனைவருக்கு எப்படி தெரியும் என்கிறீர்களா? அவளுக்கு வந்த காதல் கடிதங்களுக்கு அனைத்திற்க்குமே இதே பதில் சொல்லி சொல்லி அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது.

1 1/2 வருடங்கள் கழித்து அந்த கல்லூரியின் விழா ஒன்று வந்தது. விழா நடத்த வெளியில் சென்று ஸ்பான்சர்ஷிப்(தமிழில் என்ன வார்த்தை என்று தெரிந்தால் கூறுங்கள்) பிடிக்க வேண்டும். ஸ்பான்சர்ஷிப் பிடிப்பது கல்லூரியின் விடுமுறை நாட்களில் நடைபெறும். பொதுவாக பெண்கள் சென்று ஸ்பான்சர்ஷிப் பிடிப்பதுதான் வழக்கம்(பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்). நம் நாயகியின் கலகலப்பான பேச்சும் அழகும் இந்த வேளைக்கு ஏற்ற ஆளாக அமைந்து விட்டது.

இந்த மாதிரி செல்லும் பெண்களுடன் நம் பாதுகாவலர்கள் உடன் செல்வது வழக்கம். ஆனால் நம் குமாரோ பீகாரில் இருந்து வந்திருப்பதால் விடுமுறை கிடைக்கும் சமயம் மட்டுமே ஊருக்கு செல்ல முடியும் ஆகவே ஊருக்கு சென்று விட்டான்.

இது போன்ற சமயங்களில் நம் பெண்களுக்கு இரண்டாம் பாதுகாவலர்களாக சிலர் சில நாள் செயல் படுவார்கள். முதல் பாதுகாவலர்கள் வரும் வரை எல்லா விசயங்களுக்கும் துணையாக இருப்பார்கள் பின் விலகி சென்றுவிடுவார்கள்.

அப்படிப்பட்ட ஒருவனை கூட்டிக் கொண்டுதான் அந்த முக்கியமான நாளில் நம் நாயகி ஸ்பான்சர்ஷிப் பிடிக்கச் சென்றால். அப்படி செல்லும் சமயம் அந்த இரண்டாம் பாதுகாவலர் நம் நாயகன் ஆரனை துணைக்கு அழைத்ததுதான் இந்தக் கதையின் திருப்புமுனை( பொதுவாக 2 - 3 ஆண்கள் ஒரு பெண் என்றுதான் ஸ்பான்சர்ஷிப் பிடிக்கச் செலவது வழக்கம் ). அது வரை 1 1/2 வருடங்களில் நம் நாயகியும் நாயகனும் ஒரு முறை கூட பேசியது கிடையாது. நம் நாயகன் நாயகியை விடுங்கள் எந்தப் பெண்ணிடமும் பேசியது கிடையாது.

ஸ்பான்சர்ஷிப் பிடிக்க பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் சமயம் இரண்டு சீட் மட்டும் கிடைக்க(தனிதனியாக) நம் நாயகியும் இரண்டாம் பாதுகாவலரும் உட்கார்ந்து கொண்டார்கள். நம் நாயகி பக்கத்தில் சீட் காலியானதுதான் நான் இந்தக் கதையை உங்களுக்கு சொல்ல காரணமாக அமைந்தது. சீட் காலியானதைக் கண்ட நாயகி நம் நாயகனை அருகில் அமர அழைத்தாள். நாயகனுக்கோ கூச்சத்தில் நம் இரண்டாம் பாதுகாவலரை சென்று நாயகி அருகில் அமரச் சொல்லி தனக்கு அவனுடைய சீட் கொடுக்கச் சொல்ல, நாயகி இரண்டாம் பாதுகாவலரும் வற்புறுத்த நாயகி அருகில் சென்று நம் நாயகன் அமர்ந்தார்.

கம்பர் 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கிலாள்' என்று கூறுகிறார். இந்த இரண்டு வரியைப் படித்ததுமே சரி காதல் உண்டாயிடுச்சு என்று நாம் அறிகிறோம். இன்னைக்கும் 'ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய் சிறு புன்னகையால் என்னை கறைய வைத்தாய்' வரிகள் இருக்கு. இப்படி பார்வையிலேயே காதல் ஜுரம் கொள்ளச் செய்யும் காதல் 1 மணி நேரப் பயணத்தில் ஜன்னியே வரச் செய்துவிடாதா?

அப்படித்தான் ஆனது நம் நாயகனுக்கு. நம் நாயகி பையன் ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனா இருக்கானே அதனாலே நல்லா பேசுவோம் அப்பதான் கூச்ச சுபாவம் போகும் என்றுதான் பேசினாலே தவிர காதல் எல்லாம் இல்லை அந்த சமயத்தில்.

பின் என்ன ஆயிற்று நாயகிக்கு நாயகன் மேல் எப்படி காதல் வந்த்து? குமார் நிலைமை என்ன என் கேள்விகள் என்ன என்பதை எல்லாம் அடுத்த பதிவில் சொல்கிறேன்

Sunday, May 21, 2006

எந்தெந்த காதல்கள் பற்றிப் பேசப் போகிறேன்?

மண்டலப் பொறியியல் கல்லூரியில் படித்த சமயம் எங்கள் வகுப்பில் 9 பெண்கள் 8 காதல் ஜோடிகள்.

10ம் வகுப்பு வரை என் வகுப்பில் இருந்த அனைத்து பையன்களுக்கும் ஒரு காதல் கதை உண்டு.

12ம் வகுப்பில் வேறு பள்ளியிலும் நான் இருந்த வகுப்பில் காதல்கள் பல இருந்தன.

மிக மிக சிறு பிள்ளைத்தனமாக கை கிழித்து ரத்தத்தில் பெயர் எழுதிய காதல்களையும் நான் கண்டிருக்கிறேன். மிக அமைதியாக அடக்கமாக முதிர்ச்சியான காதல்களும் உண்டு.

அனைத்தையும் இங்கு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

என்னைப் பற்றி

காங்கேயம் என்னும் அழகிய ஊரில் பிறந்து, பல ஊர்களில் சென்று படித்து, வேலை பார்த்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். காதல் என்னை வசீகரித்தது போல வாழ்வில் எதுவும் என்னை வசீகரித்ததில்லை.

அதனாலேயோ என்னவோ காதல் கொண்டவர்கள் என்னிடம் அவர்களின் காதல் பற்றி, பிரச்சனைகள் பற்றி சுலபமாக பேசி விடுவார்கள். காதல் கொண்டு அதனை சொல்ல முடியாமல் இருந்தவர்களும் என்னிடம் அவர்களுடைய காதல் பற்றி சொல்லி விடுவார்கள். ஆகவே எனக்கு பல வகை காதல்கள் பரிச்சயம்.

அதனை பற்றி பேசவே இந்தப் பதிவு.

என்ன எழுதப் போகிறேன்?

சின்ன வயதில் இருந்தே காதல் புனிதமானது என்று நம்பித் திரிந்த ஆள் நான். இப்பொழுதும் அந்த நம்பிக்கையிலிருந்து மாறுபாடுகள் அதிகம் இல்லை எனக்கு. அப்படி நம்பிக்கை வைத்து திரிந்தால் என்னை சுற்றி நடந்த காதல்களில் தனி ஈடுபாடு உண்டு எனக்கு.

எனக்கு புனிதமாகத் தெரிந்த சில காதல்கள் பிரிந்ததுண்டு. நான் என்னடா காதல் செய்கிறார்கள் என்று நினைத்த காதல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு.

காதல் திருமணத்தில் நின்று பெண் மாப்பிள்ளை கிண்டல் செய்த அனுபவமும் உண்டு. காதலரின் கடைசி சந்திப்பில் இருந்து அழுது கொண்டே வந்த தோழனை அழைத்துக் கொண்டு நடந்த சம்பவங்களும் உண்டு.

மொத்ததில் என் அனுபவங்கள் எனக்கு காதலைப் பற்றி பல விசயங்களைக் கற்றுத் தந்தது முக்கியமாக காதலில் தோல்வி என்பது என்றுமே இல்லை என்பதை உணர்த்தியது. காதலில் பிரிவு உண்டு ஆனால் பிரிவிலும் காதல் வெற்றிதான் கொள்கிறது.

இப்படி என்னை நெகிழ வைத்த, ஆச்சர்யப்படுத்திய, கோபம் கொள்ளச் செய்த, அழுக வைத்த, காதல்களைப் பற்றி பகிர நினைத்ததன் விளைவே இந்தப் பதிவு.